கொழும்பு:இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில், விடுதலைப் புலிகள் ஆதரவுக் கட்சியான, தமிழ் தேசியக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில், ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், வடக்கு மாகாணத்தில் அவரது கட்சி தோல்வி அடைந்தது, பெரிய பின்னடைவதாகவே கருதப்படுகிறது.
இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப் போரால், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில், பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்கவில்லை. குறிப்பாக, கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 25 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை.விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. வடக்கு மாகாணம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து, மொத்தம் 65 உள்ளாட்சி அமைப்புகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், நேற்று முன்தினம் அமைதியாக நடந்தது.தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், வடக்கு மாகாணத்தில், 18 இடங்கள், தமிழ் தேசியக் கூட்டணி வசம் வந்தன. தமிழ் தேசியக் கூட்டணிக்கு எதிராக செயல்படும், தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு, இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. அதிபர் ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி, வடக்குப் பகுதியில் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில், அதிபர் ராஜபக்ஷேவின் கட்சி, படு தோல்வி அடைந்திருப்பது, இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அவருக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.