நித்திரவிளை : ஸ்மார்ட் கார்டு திட்டத்தால் முதியோர் பென்ஷன் திட்ட பயனாளிகள் குழப்பமடைந்துள்ளனர்.ஏழைகள், விதவைகள், மூத்த குடிமகன்கள் என பலதரப்பினருக்கு அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. தகுதியுடையவர்கள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கான பென்ஷன் தொகை ஆயிரம் ரூபாய் வீட்டில் இருந்தவாறே போஸ்ட்மேன் மூலம் ஒவ்வொரு மாதமும் பெற்று வந்தனர். தற்போது பயனாளிகள் பென்ஷன் தொகையை பெற்றுக்கொள்ள வசதியாக பஞ்., கள் சார்பில் பாங்கில் கணக்கு தொடங்கப்பட்டு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில் வாவறை பஞ்., சிற்கு உட்பட்ட பயனாளிகளின் வசதிக்காக பஞ்., மூலம் நடைக்காவு ஐ.ஓ.பி., பாங்கில் கணக்கு துவங்கப்பட்டு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வரவு, செலவுகளை பதிவு செய்வதற்காக அட்டை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் 275 பயனாளிகளில் 255 பேர் ஸ்மார்ட் கார்டு பெற்றுள்ளனர்.இவர்கள் ஸ்மார்ட் கார்டு மூலம் பணத்தை பெற்றுக்கொள்ள வசதியாக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சில நாட்களில் பஞ்., அலுவலகத்தில் இருந்து பயனாளிகள் பென்ஷன் தொகையை பெற்றுக்கொள்ளலாம். வாவறை பஞ்., சில் பென்ஷன் திட்ட பயனாளிகள் ஸ்மார்ட் கார்டு திட்டத்தின் மூலம் கடந்த மாதம் பஞ்., அலுவலகத்தில் சென்று பென்ஷன் தொகையான ரூபாய் ஆயிரத்தை பெற்று கொண்டனர்.வழக்கத்திற்கு மாறாக இந்த மாதம் பென்ஷன் தொகையை வாங்குவதற்காக சென்றவர்களுக்கு 900 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனாளிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிலர் ஆயிரம் ரூபாய்க்கு 900 ரூபாய் என கூறியதால் முணு முணுக்க துவங்கினர். இதை அறிந்த சிலர் பென்ஷன் தொகையை வாங்க சொல்லவில்லை. இதனால் ஸ்மார்ட் கார்டு மூலம் பணம் பெற வேண்டுமா அல்லது குறிப்பிட்ட பாங்கில் இருந்து பணம் பெற வேண்டுமா என்ற கலக்கத்திலும் 100 ரூபாய் குறைந்துவிடுமோ என்ற சந்தேகத்திலும் உள்ளனர்.இதுகுறித்து பென்ஷன் திட்ட பயனாளிகள் சிலர் கூறியதாவது:போஸ்ட் ஆபிஸ் மூலம் போஸ்ட்மேனின் கையில் இருந்து வீட்டில் இருந்தவாறே பென்ஷன் தொகையை பெற்றுக்கொண்ட போது எந்த சிக்கலும் இல்லை. வீட்டில் இருந்தவாறே பணத்தை பெற்றுக் கொள்வதால் சந்தோஷமாக இருந்தோம். இந்நிலையில் பஞ்., சின் மூலம் பாங்கில் கணக்கு துவங்கி ஸ்மார்ட் கார்டு மூலம் பென்ஷன் தொகையாக கடந்த மாதம் ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டோம்.இந்த மாதம் பென்ஷன் தொகையை பெற்றுக்கொள்ள சென்ற போது 900 ரூபாய் வழங்கப்பட்டது. இதனால் சிலர் பணத்தை வாங்க மறுத்துள்ளனர். மேலும் பென்ஷன் திட்ட பயனாளிகள் பெரும்பாலும் முதியவர்கள், நோயாளிகளாக இருப்பதால் வீட்டில் இருந்தவாறே பணத்தை பெற்றுக்கொண்ட போது எவ்வித பிரச்னையும் எழவில்லை.தற்போது பஞ்., அலுவலகத்திற்கு செல்லும் நிலையில் 100 ரூபாய் குறைத்து வழங்கப்படுகிறது. எனவே ஏற்கனவே நடைமுறையில் இருந்தது போன்று போஸ்ட்மேன் மூலம் பென்ஷன் தொகை வழங்கினால் வசதியாக இருக்கும் என்று கூறினர்.இது குறித்து சம்பந்தப்பட்ட பாங்க் அதிகாரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:பென்ஷன் திட்ட பயனாளிகளுக்கு சீறோ பேலன்ஸ் அக்கவுண்ட் தொடங்கப்பட்டுள்ளது. பயனாளிகளின் பணம் யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களுக்கு சேர வேண்டிய பணம் அவர்களது அக்கவுண்டிலேயே இருக்கும். எதார்த்தமாக 100 ரூபாய் குறைத்து கொடுத்தாலும் அந்த பணம் குறிப்பிட்ட நபர்களது அக்கவுண்ட்டிலேயே இருக்கும். இவ்வாறு அதிகாரி கூறினார்.விழிப்புணர்வு இல்லைபென்ஷன் திட்ட பயனாளிகளுக்கு பாஸ்புக் வழங்காமல் அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் பெயரில் பாங்கில் சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டுள்ளாதா என்ற சந்தேகம் பயனாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. பணம் கொடுப்பவர் அட்டையில் ஒன்றும் பதிவு செய்யாததும், பணம் பெற்ற பிறகு பாங்கில் சென்று அட்டையில் பதிவு செய்ய வேண்டும் என்ற விவரமும் இவர்களுக்கு தெரியவில்லை. மொத்தத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டம் குறித்து பயனாளிகளுக்கு போதிய விழிப்புணர்வு தேவை. இதற்கு சம்பந்தப்பட்ட பாங்க் மற்றும் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
courtesy: dinamalar
No comments:
Post a Comment